செப்டம்பர் 25, 2025
தைபே: நடப்பாண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றான ‘ரகாசா’ சூப்பர் புயல், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆசியாவின் தென்கிழக்கு நாடுகளைத் தாக்கி, கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ‘ரகாசா’ புயல், மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் தாக்கியதால், பலத்த மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. தைவான் மற்றும் ஹாங்காங் தீவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தைவானில் வெள்ளம்; 14 பேர் பலி
தைவானின் கிழக்கு ஹுவாலியன் மாகாணத்தில் புயல் காரணமாக ஒரு ஏரியின் தடுப்பு உடைந்ததால், திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ஹாங்காங்கில் விமான சேவை நிறுத்தம்; 90 பேர் காயம்.
ரகாசா புயல் ஹாங்காங்கை நெருங்கியபோது, மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் நகரெங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடல் அலைகள் உயர்ந்ததால், கடற்கரையோர ஹோட்டல்களும் வணிக வளாகங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் புயலில் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் உயர் எச்சரிக்க
ரகாசா புயல், ஹாங்காங்கை கடந்த பிறகு சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால், சீனா உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் புயல் காரணமாக ஏற்பட்ட மொத்த சேதங்களின் மதிப்பு இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.



