தேனி மாவட்டத்தில்,பழனிசெட்டிபட்டி போடி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நிலம் 1961 ஆம் ஆண்டு அசைன்மென்ட் ஆக தொழிற்சாலை நடத்த கொடுக்கப்பட்டது.

இந்த தொழிற்சாலை நஷ்டமடைந்து இயங்காத காரணத்தால் தனி நபர்கள் ஆக்கிரப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்டி விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஆணை 2016 ஆம் ஆண்டு பிரகாரம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் நிலத்தை கையகப்படுத்தி பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனிசெட்டிபட்டியில், போடி – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் அமைந்துள்ள போஜராஜ் மில்ஸ் நிறுவனம் சம்பந்தமாக தமிழக அரசு 2016-ம் வருடம் வெளியிட்டுள்ள 29.9.2016 தேதியிட்ட G.O(Ms).No.250 (Revenue LD-1(2) Department) அரசாணையில் கீழ்காணும் விவரங்கள் கூறப்பட்டுள்ளது.

போஜராஜ் மில்ஸ் அமைக்கப்படுவதற்காக 1961-ஆம் ஆண்டில் 21.8.1961 தேதியிட்ட அரசாணை G.O No.5106 (Industries Labour and Co-operation) வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் பழனிசெட்டிபட்டியில் வீரபாண்டி வருவாய் கிராமத்தில் தனிநபர்களிடமிருந்து 74.85 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு போஜராஜ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் கம்பெனிக்கு (Assignment) ஒப்படை செய்யப்பட்டது.

மேலும் அப்படி ஒப்படை செய்யப்பட்ட பத்திரத்தின் (Assignment Deed-ன் Clause-4) சரத்து 4-ன்படி இந்த ஒப்படை செய்யப்பட்ட நிலம் தேவையில்லை என கம்பெனி தாமாக முன்வந்து அரசிடம் கூறும் சூழலில், அரசு இந்த நிலத்தை பொது நலனுக்காக திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் அல்லது அரசு பரிசீலனை செய்து இந்த இடத்தை இதன் அசல் / மூல உரிமையாளர்கள் (Original Owners) அவர்களிடமே திரும்ப வழங்கி விடலாம் என்றும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேலை மேற்படி அதிகாரத்தை அரசு பயன்படுத்த விரும்பாத சூழலில், இந்த விவரத்தை தமிழக அரசு கம்பெனியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் கம்பெனி இந்த நிலத்தை தன் இஷ்டம்போல் எப்படி வேண்டும் என்றாலும் (dispose of) கையாண்டு கொள்ளலாம், அதாவது, விற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படியிருக்க, போஜராஜ் மில்ஸ் நிறுவனம் பல காரணங்களால் நஷ்டத்தில் இருப்பதாகவும், கம்பெனியின் இயந்திரங்கள் பழமையாக இருப்பதால் உற்பத்தியை பெருக்க முடியாத சூழல் இருப்பதாகவும், மேலும் புது இயந்திரங்களை வாங்க கம்பெனி விரும்புவதாகவும், அதற்காக மேற்படி 74.85 ஏக்கர் நிலத்தில் 49.40 ஏக்கர் நலத்தை விற்க தமக்கு அனுமதி வழங்குமாறு போஜராஜ் மில்ஸ் நிறுவனம் 23.8.2013 மற்றும் 06.11.2013 ஆகிய தேதியிட்ட கடிதங்களின் மூலம் அரசிடம் முறையிட்டுள்ளது.
இறுதியாக, தமிழக அரசு 2016-ம் வருடம் 29.9.2016 தேதியிட்ட G.O(Ms).No.250 (Revenue LD-1(2) Department) அரசாணை மூலம், போஜராஜ் மில்ஸ் நிறுவனம் மேற்படி 49.40 ஏக்கர் நிலத்தை விற்க தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இது மட்டுமல்லாமல், ஒப்படை செய்யப்பட்ட மேற்படி 49.40 நிலம் கம்பெனிக்கு எந்த காரணத்திற்காக வழங்கப்பட்டதோ அந்த காரணத்திற்காக தற்போது கம்பெனிக்கு தேவைப்படாததாலும், அரசின் கைவசம் நிலங்கள் பற்றாக்குறையாக இருப்பதன் காரணத்தாலும், மேற்படி 49.40 ஏக்கர் நிலத்தை அரசின் மற்ற பொது நலனுக்காக பயன்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மேற்படி 29.09.2016 தேதியிட்ட அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளதற்கு மாறாக தற்போது பத்து வருடங்கள் கழித்து இந்த நிலங்கள் முழுவதும் போஜராஜ் மில்ஸ் நிறுவனத்தால் சுற்றுச் சுவர் அமைக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
மேற்படி 29.09.2016 அராசனையின்படி இந்த 49.40 ஏக்கர் (Assignment) ஒப்படை நிலத்தை தமிழக அரசு கைப்பற்றி பொது நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




